ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - கர்நாடக வாலிபர் சிக்கினார்
ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரமாக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கர்நாடக வாலிபர் சிக்கினார்.
ஈரோடு,
ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் அரசு மாணவர்கள் விடுதிக்கு அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது வேறொருவர் பணம் எடுப்பதற்காக அங்கு வந்தார். அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் செல்ல முயன்றபோது, ஏ.டி.எம். எந்திரத்தை வாலிபர் உடைத்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த நபர் அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு வரவழைத்தார். பொதுமக்கள் திரண்டதை பார்த்ததும் அந்த வாலிபர் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்த வாலிபர் கர்நாடக மாநிலம் மடிச்சேரியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 27) என்பதும், கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. பிடிபட்ட சந்திரகுமார் ஏற்கனவே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையடிக்க முயன்ற ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் இருந்துள்ளது. சந்திரகுமாரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்ததால் அந்த பணம் தப்பியது. ஈரோட்டில் பட்டப்பகலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, வாலிபர் ஒருவர் பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story