வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் குமாரவேல் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

தளவானூர் ஏரி வரத்து வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கக்கோரி பலமுறை முறையிட்டு வருகிறோம். சமீபத்தில் நடந்த ஜமாபந்தியிலும் மனு கொடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை நிறைவேற்ற வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கையை வேளாண் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும். எந்தவித காலதாமதமும் இன்றி சொட்டுநீர் பாசனத்தை விரைந்து அமைத்துக்கொடுக்க வேண்டும். கம்பு, சோளம், ராகி, தினை உள்ளிட்ட சிறுதானியங்களின் விதைகளை இருப்பு வைத்து தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்குதல், வங்கிகளில் விவசாயிகளின் பேரில் வியாபாரிகள் நகைக்கடன் வாங்கி பயன்பெறுகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல் தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் வழங்க வேண்டும். 2 வருடத்திற்கு ஒருமுறை வழங்கக்கூடிய மண்வள பாதுகாப்பு அட்டை பெரும்பாலான விவசாயிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த கோட்டாட்சியர் குமாரவேல், கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் தாசில்தார்கள் விழுப்புரம் செல்வராஜ், விக்கிரவாண்டி பார்த்திபன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆனந்தன, குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகரன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அலெக்சாண்டர், வருவாய் ஆய்வாளர் சாதிக் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story