சூளகிரியில் வியாபாரியின் 2-வது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


சூளகிரியில் வியாபாரியின் 2-வது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் வியாபாரியின் 2-வது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 59). இவர் பழம் மற்றும் தானிய வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லதா(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

ராமகிருஷ்ணனுக்கு முதல் மனைவி இறந்து விட்டதால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு லதாவை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை ராமகிருஷ்ணன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது, லதா, வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். பின்னர், தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சூளகிரி போலீசாருக்கு அவர் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லதா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் என்றும், நோய் குணமாகாததால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பழ வியாபாரியின் 2-வது மனைவி தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story