வீடு புகுந்து தாக்குதல், காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தை சாவு - கொலை வழக்காக பதிவு, ஒருவர் கைது
சிவகங்கை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு புகுந்து தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த, அவரது தந்தை சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கையா (வயது 55). இவருடைய மகன் சரத்குமார் (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினரான நாகராஜன் என்பவர் உள்பட 6 பேர் ஆத்திரமடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சரத்குமாரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு அவரது தந்தை சொக்கையாயும், சகோதரர் ஜெகனும்(23) இருந்துள்ளனர். இதனால் அவர்களிடம் நாகராஜன் உள்பட 6 பேரும் ஆயுதங்களை காட்டி தகராறு செய்தனர். பின்னர் தந்தை, மகனையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சொக்கையாவையும், ஜெகனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் நாகராஜன் உள்பட 6 பேர் மீது சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சொக்கையா இறந்து போனார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். பின்னர் அதில் தொடர்புடைய ஜான்கென்னடி (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பையா(35) என்பவர் திருப்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story