மழைக்காலம் தொடங்கும் முன்பே குடிமராமத்து பணிகளை முடிக்க திட்டம் நீர்வள ஆதார தலைமை பொறியாளர் தகவல்
மழைக்காலம் தொடங்கும் முன்பே குடிமராமத்து பணிகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்று தர்ம புரியில் ஆய்வு நடத்திய நீர்வள ஆதார அமைப்பின் மண்டல தலைமை பொறியாளர் ஜெயராம் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜெயராம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் குடிமராமத்து பணிகள், பாசன மடைகள், கண்மாய்கள், பாசன கால்வாய்கள் புதுப்பித்தல், சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை 100 சதவீதம் தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் 2016-2017-ம் ஆண்டில் 21 ஏரிகளில் ரூ.158 லட்சம் மதிப்பிலும், 2017-2018-ம் ஆண்டில் 10 ஏரிகளில் ரூ.327.65 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஆண்டில் 10 ஏரிகளில் ரூ.5 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அன்னசாகரம் ஏரி, சோகத்தூர் ஏரி, கொளகத்தூர் சோழராயன் ஏரி, கொளநாச்சியம்மன் ஏரி, சிக்கமதின்ன அள்ளி ஏரி, அதியமான்கோட்டை ஏரி, பாலவாடி ஏரி, பனங்கள்ளி ஏரி, புலிக்கல் ஏரி, செங்கன்பசுவந்தலாவ் ஏரி சீரமைக்கப்படுகிறது.
ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியை தூர்வாரி கரையினை பலப்படுத்துதல் வழங்கு கால்வாய் உபரி நீர் செல்லும் வழியினை சீரமைத்தல், மதகுகள், கண்மாய்கள், கலிங்குகளை சீரமைத்தல், பாசன வாய்க்காலை மேம்படுத்துதல், மற்றும் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.
குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏரிகளின் அருகே உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகளை மழைகாலம் தொடங்கும் முன்பே தொய்வின்றி முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்புடன் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏரியின் முறைப்படுத்தப்பட்ட அளவில் தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் லெனின்பிரான்சிஸ், உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், மோகனபிரியா, வெங்கடேஷ் மற்றும் பாசன சங்க விவசாயிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story