கூடலூரில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கூடலூரில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சுகாதார பணிகள் மேற்கொள்வதற்காக 25 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர தினக்கூலி அடிப்படையில் 45 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அப்போது கடந்த மாதம் சம்பளம் தங்களுக்கு இதுவரை முழுமையாக வழங்காததை கண்டித்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகர பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதாரத்துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் கூறிய தாவது:-
கூடலூர் நகராட்சி அலுவலக கணக்கில் 80 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. ஆனால் 45 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அரசு நிர்ணயித்துள்ள சம்பளமும் வழங்குவது இல்லை. மாதம் ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பாதிப்பணம் நேரடியாகவும், மீதி தொகை வங்கி மூலம் செலுத்தப்படுகிறது. கடந்த மாத சம்பளம் ரூ.5 ஆயிரம் மட்டுமே நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூ.3 ஆயிரம் இதுவரை வழங்கவில்லை. இது சம்பந்தமாக ஒப்பந்ததாரரிடம் கேட்டால் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறி வருகிறார். மேலும் பணமும் வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இதனால் வாடகை, உணவு உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இன்றைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டால் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் வருங்கால வைப்பு நிதி கணக்கிலும் முறையாக பணம் செலுத்தப்படுவது இல்லை. இதேபோல் வார விடுமுறை இன்றி பணியாற்றி வரும் எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் நாட்களில் சம்பள தொகை முழுமையாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களிடம் நகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து சில மாதங்களில் ரூ.9,500 சம்பளம் உயர்த்தி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று காலை 9 மணிக்கு ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.
இந்த சம்பவத்தால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர், பந்தலூர் பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் கிடைக்காமல் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட உயரதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story