மாவட்ட செய்திகள்

கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை + "||" + At the Government Hospital Training Nurses Demonstrated

கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை

கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
கஸ்தூரிபா காந்தி அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் பயிற்சியின் போது உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என பயிற்சி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 60). இவர், கடந்த 8-ந்தேதி உடல் நலக் குறைவு காரணமாக கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த புதன்கிழமை அந்தோணியம்மாளுக்கு பயிற்சி செவிலியர்கள் ஊசி மூலம் மருந்து செலுத்தி உள்ளனர். சில நிமிடத்திலேயே மூதாட்டி சுயநினைவு இழந்துள்ளார். டாக்டர்கள் உடனடியாக வந்து பரிசோதித்த போது அந்தோணியம்மாள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணியம்மாளின் உறவினர்கள், தவறான மருந்தை செலுத்தியதால்தான் அவர் உயிரிழந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அந்தோணியம்மாளுக்கு சிகிச்சை அளித்த 2 பயிற்சி செவிலியர்ளை அவரது உறவினர்கள் தாக்கினர்.

இதையடுத்து அந்தோணியம்மாளின் உடல் பிரேத பரிசோதனை முடிவில், அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார், தவறான மருந்து எதுவும் செலுத்தவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

பயிற்சி செவிலியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 150-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘தங்களுக்கு பயிற்சியின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், பயிற்சி செவிலியர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் விஜயா கூறியதாவது:-

கடந்தபுதன்கிழமை பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்தோணியம்மாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவர் இறந்த துக்கத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அந்த அறையில் இருந்த 2 பயிற்சி செவிலியர்களை தாக்கினர். இந்த சூழ்நிலையில் நாங்கள் நோயாளியையும், அவர்களது உறவினர்கள் மீது மட்டும் கவனம் செலுத்தினோம். பயிற்சி செவிலியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பிறகு நடவடிக்கை எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்தோம்.

இந்த சம்பவம் குறித்து பயிற்சி செவிலியர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், போலீஸ் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம்.

மேலும் பயிற்சி செவிலியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...