பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்


பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தங்களது பட்டா நிலத்தில் முழு மானியத்துடன் பண்ணைக்குட்டை அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விவசாயத்தில் பண்ணைக்குட்டையின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் 10 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் ரூ.100 கோடி செலவில் முழு மானியத்துடன் அமைக்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்பொழுது விருதுநகர் மாவட்டத்திற்கு 400 பண்ணைக் குட்டைகள் முழு மானியத்துடன் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 சென்ட் பரப்பளவில் 30 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும், 2 மீட்டர் ஆழமும் கொண்ட பண்ணைக்குட்டையை ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் முழு மானியத்துடன் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக அமைத்து கொடுக்கப்படுகிறது.

இதில் சுமார் 18 லட்சம் லிட்டர் நீர் அல்லது 63,500 கனஅடி நீர் சேமிக்கப்படுகிறது. பண்ணைக்குட்டையின் நீரினைக் கொண்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் 5 ஏக்கர் பரப்பிலுள்ள பயிருக்கு பாசனம் செய்யலாம். பண்ணைக்குட்டை அமைப்பதால், பண்ணைக்குட்டையினை சுற்றியுள்ள நிலங்களில் பருவ நிலை, பயிரின் வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையாகி பயிரின் விளைச்சலை கூட்டுகின்றது. மேலும் பண்ணைக் குட்டைகளில் மீன்களை வளர்த்தும் உபரி வருமானம் பெறுவதற்கு வழி வகை செய்கிறது. நீளம் மற்றும் அகலத்தினை 20 மீட்டருக்கு குறைவில்லாது விவசாய நிலங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையோ அணுகலாம். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை வட்டார விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது நில உரிமை ஆவணங்களான பட்டா, அடங்கல் மற்றும் புலவரைபடத்துடன் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகலுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story