கொடுமுடி அருகே கணவரை தாக்கிவிட்டு காதல் மனைவி காரில் கடத்தல்; தொழிலாளி உள்பட 3 பேர் கைது


கொடுமுடி அருகே கணவரை தாக்கிவிட்டு காதல் மனைவி காரில் கடத்தல்; தொழிலாளி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 7:18 PM GMT)

கொடுமுடி அருகே கணவரை தாக்கிவிட்டு காதல் மனைவியை கும்பல் ஒன்று காரில் கடத்திச்சென்றது. இதுதொடர்பாக தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடுமுடி,

சிவகிரியை சேர்ந்தவர் பழனிவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பார்த்திபன் (வயது 25). எலக்ட்ரீசியன். இவருக்கும் சிவகிரி அருகே பாறப்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் நிவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் நிவேதாவின் வீட்டுக்கு தெரியவந்தது.

பார்த்திபனும், நிவேதாவும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் காதலர்கள் 2 பேரும் காதலில் உறுதியாக இருந்தனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி பார்த்திபனும், நிவேதாவும் வீட்டை விட்டுவிட்டு வெளியேறினார்கள். பின்னர் 15-ந்தேதி சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் 2 பேரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் தன்னுடைய மகள் நிவேதாவை சிவகிரியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடத்திச்சென்று விட்டார் எனக்கூறி சிவகிரி போலீசில் பொன்னுசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நிவேதாவும், பார்த்திபனும் சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

இதில் நிவேதா என்னை யாரும் கடத்தவில்லை. விருப்பத்தின் பேரில்தான் பார்த்திபனை காதல் திருமணம் செய்து கொண்டேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிவேதா காதல் கணவர் பார்த்திபனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் சிவகிரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சிவகிரியில் இருந்து. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பார்த்திபனும், நிவேதாவும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் சென்றபோது, ஒரு கார் ஒன்று பார்த்திபனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை தாக்கிவிட்டு அவருடைய காதல் மனைவியான நிவேதாவை காரில் தூக்கிப்போட்டனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து காரை எடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

இதுகுறித்து பார்த்திபன் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிவேதாவை கடத்தியதாக பூந்துறையை சேர்ந்த தொழிலாளியான சக்திவேல் (வயது 46) மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த சிவக்குமார் (39), சீனிவாசன் (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட நிவேதாவை தேடி வருவதோடு, இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story