சுரங்கப்பாதைக்குள் தேங்கிய மழைநீர்: ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்


சுரங்கப்பாதைக்குள் தேங்கிய மழைநீர்: ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 9:45 PM GMT (Updated: 20 July 2019 7:41 PM GMT)

சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கியதால், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ளது குப்பநத்தம் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக கடலூர்-விருத்தாசலம் மார்க்கத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இதில் குப்பநத்தத்தில் இருந்து, கோட்டேரி, காணாது கண்டான், இருப்புக்குறிச்சி, ஊ.அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வரும் வகையில் அங்கு ஆளில்லா ரெயில்வே கேட் அமைந்திருந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுவரவும் இந்த பாதை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் ஆளில்லா ரெயில்வே கேட்டுகளை மூடும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த வகையில் குப்பநத்தத்தில் இருந்து ஆளில்லா ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு, அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது. இதனால் இந்த கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகி றது. இதை கண்டித்து கிராம மக்கள் சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தியும், மழைநீர் வழிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் நேற்று சுரங்கப்பாதைக்குள் தேங்கி நின்ற மழைநீருக்குள் நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சுரங்கப்பாதை அமைத்த ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்றக்கோரியும் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மழைநீரை சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story