கோவையில் வீட்டுமனை சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி பணத்தை இழந்தவர்கள் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


கோவையில் வீட்டுமனை சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி பணத்தை இழந்தவர்கள் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2019 10:45 PM GMT (Updated: 20 July 2019 8:29 PM GMT)

கோவையில், வீட்டுமனை சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி நடைபெற்று உள்ளது. பணத்தை இழந்தவர்கள் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை காந்திபுரம் 100 அடி சாலை 3-வது வீதியில் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் வீட்டுமனை வழங்குவதாகவும், தங்கநகை வழங்குவதாகவும் கூறி ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாத சீட்டில் ஏராளமானோர் பணம் செலுத்தி வந்தனர். சீட்டு முடிவடைந்த பின்னர் அந்த நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலும், தங்கநகை கொடுக்காமலும் இழுத்தடித்து வந்தனர்.

பலர் லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய காசோலையும் பணம் இன்றி திரும்பி வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் காந்திபுரம் 100 அடி சாலை 3-வது வீதியில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்களை சிறைபிடித்தனர்.

பணம் செலுத்தி ஏமாந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் முதலீடு செய்த ஆவணங்களுடன் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இந்த மோசடி தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த மோசடி பொருளாதார குற்றப்பிரிவுக்கு வரும் என்று நகர குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் மனுக்களை வாங்காமல் திருப்பி அனுப்பினார்கள். இதனால் தாங்கள் இழுத்தடிக்கப்படுவதாக கூறி மீண்டும் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சொர்ணா, சரண்யா உள்ளிட்டவர்கள் கூறியதாவது:-

கோவை மேட்டுவாவி என்ற இடத்தில் வீட்டுமனை தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்தனர். நாங்களும் லட்சக்கணக்கில் பணம் செலுத்திய பின்னர் வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்டோம். ஆனால் பத்திரப்பதிவு செய்து தரவில்லை. தொடர்ந்து பணத்தை தராமல் ஏமாற்றியதால் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டோம். மேலும், கிளை நிறுவன அலுவலகங்களை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

புகார் மனுக்களை பெற்று, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story