மகளிர் கல்லூரியுடன் இணைந்து ‘நாப்கின்’ தயாரிக்கும் திட்டம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது
டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில், மெட்ராஸ் நார்த் ரோட்டரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் உருவாகியுள்ளது.
சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில், மெட்ராஸ் நார்த் ரோட்டரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் உருவாகியுள்ளது. இந்த தொழில் மையத்தை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த தொழில் மையத்தில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆண்டுக்கு 6 லட்சம் நாப்கின்கள் இங்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் நாப்கின்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில், “இந்த திட்டத்தின் மதிப்பு, இடம் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் சேர்த்து தோராயமாக ரூ.10 லட்சம் ஆகும். வாய் பேசாத மற்றும் காதுகேளாதோர் உள்ளிட்ட 8 பெண்கள் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் தரமிக்க நாப்கின்கள் குறைந்த விலையில் ‘கண்ணம்மா’ எனும் வர்த்தக பெயரில் விற்பனை செய்யப்படும். மேலும் எங்கள் கல்லூரியில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும். ரோட்டரி சங்க உதவியுடன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட இருக்கிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், சர்வதேச ரோட்டரி திட்ட இயக்குனர் கமல் சாங்வி, கோவை ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் அருணாசலம் முருகானந்தம், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஜி.சந்திரமோகன், சத்யபாமா அறிவியல்-தொழில்நுட்ப கல்விக்கூட வேந்தர் மரியஸீனா ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story