வருகிற 26-ந்தேதி தர்மபுரியில் புத்தக திருவிழா அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைக்கிறார்
தர்மபுரியில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் புத்தக திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைக்கிறார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக புத்தக திருவிழாவின் வரவேற்புக்குழு தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தகடூர் புத்தக பேரவை தர்மபுரி மாவட்ட மக்களிடையே முற்போக்கு கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், புத்தக வாசிப்பு பழக்கத்தை இந்த மாவட்ட மக்கள், மாணவ-மாணவிகளிடையே ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தர்மபுரியில் நடந்த முதல் புத்தக திருவிழா பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் 2-ம்ஆண்டு புத்தக திருவிழா வருகிற 26-ந்தேதி முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை தர்மபுரி பாரதிபுரத்தில் அமைந்துள்ள மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. முன்னணி பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனை நிலையங்களின் 50 அரங்குகள் இதில் அமைக்கப்படுகின்றன.
வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குகிறது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்குகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிடுகிறார். மக்கள் பிரதிநிதிகள், அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வாழ்த்தி பேசுகிறார்கள். புத்தக திருவிழா அரங்குகள் விழா நடக்கும் நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், இலக்கிய கலந்தாய்வு கூட்டங்கள், கருத்தரங்குகள், மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இதன்படி வருகிற 26-ந்தேதி மாலை காகித புரட்சி என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், 27-ந்தேதி அறிவை விரிவு செய் என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி ஆகியோர் பேசுகிறார்கள். வருகிற 28-ந்தேதி மாலை புதியன விரும்பு என்ற தலைப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன், 29-ந்தேதி அன்பென்று கொட்டு முரசே என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம், 30-ந்தேதி வரலாறு தவிர்க்க முடியாது என்ற தலைப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகிறார்கள்.
வருகிற 31-ந்தேதி மாலை புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, 2-ந்தேதி தமிழர் சமயம் என்றதலைப்பில் பாலபிரஜாபதி அடிகளார், 3-ந்தேதி பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் பேசுகிறார்கள்.
வருகிற 4-ந்தேதி தமிழரின் மரபணுவை செதுக்கியவர்கள் என்ற தலைப்பில் நடக்கும் மக்கள் சபையில் பீட்டர்அல்போன்ஸ், ஜெகத்கஸ்பர், மருதுசெல்வராஜ், பெருமாள்மணி, குணசேகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகியபிரிவுகளில் பள்ளி கல்லூரி, மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், ஓய்வு பெற்ற அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் புத்தகதிருவிழா வரவேற்பு குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story