ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு: கட்டையால் அடித்து விவசாயி கொலை மகன் வெறிச்செயல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி மகன் மரியசின்னப்பன்(வயது 56). விவசாயி. இவரது மனைவி அடைக்கலமேரி(55). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 4-வது மகன் விஜி என்கிற சகாய ஆரோக்கிய அந்தோணி(25). நேற்று காலை இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் வயலில் மணிலா பயிருக்கு தண்ணீர் பாய்ச்சினர். அப்போது விஜி விவசாய பணியை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.
இதை பார்த்த மரியசின்னப்பன், ஏன் வேலை செய்யாமல் சுற்றி வருகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜி, அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து, தந்தை என்று கூட பாராமல் மரியசின்னப்பனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும், அவரது நிலை மோசமானதாக இருந்தது. இதையடுத்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மரியசின்னப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்ட அவரது மனைவி அடைக்கலமேரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் உயிரிழந்த மரியசின்னப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அடைக்கலமேரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜியை பிடித்த விசாரித்து வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story