குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 July 2019 4:15 AM IST (Updated: 22 July 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி 33-வது வார்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குள்ளனம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஜிக்கா குடிநீர் திட்டத்தின் கீழ் வார்டு பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அந்த குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் 33-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிழக்கு மரியநாதபுரம்-மாலப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்றும், உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம் அப்பகுதி மக்கள், ஜிக்கா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 32, 33 ஆகிய 2 வார்டுகளுக்கும் ஒரே நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அதுவும் 20 நிமிடங்கள் வரை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்தே சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள், 33-வது வார்டு பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story