படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் கரை ஒதுங்கியது மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்


படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் கரை ஒதுங்கியது மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 8:59 PM GMT)

கேரளாவில் படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கிய குமரி மீனவர் உடல் கரை ஒதுங்கியது. மற்ற 2 மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கருங்கல்,

குமரி மாவட்டம் நீரோடி பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டான்லி, நிக்கோலஸ், ராஜூ, ஜாண் போஸ்கோ, சகாயம். இவர்கள் 5 பேரும் கேரள மாநிலத்தில் நாட்டு படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 மீனவர்களும் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அங்கு மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது கடல் சீற்றமாக இருந்தது. இதனால் கரை திரும்ப முடியாமல் அவர்கள் சீற்றத்தில் சிக்கி தவித்தனர்.

படகு உடைந்தது

அப்போது திடீரென படகு உடைந்தது. இதனால் கடலுக்குள் மூழ்கிய மீனவர்கள் நீந்த தொடங்கினர்.

படகில் கொண்டு வந்த தண்ணீர் கேனை பிடித்தபடி சென்றனர். நீண்ட நேரம் அவர்களால் நீந்த முடியவில்லை. இதனால் கடலுக்குள் ராஜூ, ஜாண் போஸ்கோ, சகாயம் ஆகிய 3 பேரும் மூழ்கி விட்டனர்.

அதே சமயத்தில் 8 மணி நேரம் கடலில் நீந்திய ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகிய 2 பேரும் கொல்லம் கடற்கரையை சென்றடைந்தனர். உயிர் தப்பிய 2 மீனவர்களையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் சொந்த ஊர் திரும்பினர். மேலும், கடலில் மூழ்கிய ராஜூ, ஜாண்போஸ்கோ, சகாயம் ஆகிய 3 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

உடல் கரை ஒதுங்கியது

இந்தநிலையில் நேற்று காலை கேரள மாநிலம் முருக்கம்பாடம் கடற்கரை பகுதியில் ஒரு ஆண் உடல் கரை ஒதுங்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு சிறையின் கீழ் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டது. மேலும், கரை ஒதுங்கியது மாயமான மீனவர்களில் ஒருவரின் உடலாக இருக்கலாம் என நினைத்தனர்.

சோகம்

இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சிறையின் கீழ் தாலுகா ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த உடலை உறவினர்கள் அடையாளம் காட்டினர். அப்போது, பலியான மீனவர் சகாயம் என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து சகாயத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மாலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. பலியான சகாயத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் கடலில் மூழ்கிய மற்ற 2 மீனவர்களின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் ஆவதால் அவர்களுக்கு ஏதேனும் விபரீத சம்பவம் ஏற்பட்டு இருக்குமோ என்ற சோகத்தில் உறவினர்கள் உள்ளனர். அதே சமயத்தில், மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படை தீவிரமாக ஈடு பட்டுள்ளது.

வசந்தகுமார் எம்.பி. ஆறுதல்

இந்தநிலையில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மீனவர்கள் ராஜூ, சகாயம், ஜான் போஸ்கோ ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், கரைதிரும்பிய மீனவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது நீரோடி பங்குத்தந்தை டோனி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story