‘தி.மு.க.வை நம்ப மக்கள் தயாராக இல்லை’ அமைச்சர் மணிகண்டன் பேச்சு


‘தி.மு.க.வை நம்ப மக்கள் தயாராக இல்லை’ அமைச்சர் மணிகண்டன் பேச்சு
x
தினத்தந்தி 22 July 2019 4:45 AM IST (Updated: 22 July 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

பரமக்குடி,

மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடி பயணியர் விடுதியில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார்.

பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. நகைக்கடன், கல்வி கடன், விவசாய கடன், ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக கூறி தவறான வாக்குறுதியை அளித்து வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை.

மத்தியில் நமது கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் நமது ஆட்சியை தக்க வைத்துள்ளோம். அவர்களுக்கு 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றும் எந்த பயனும் இல்லை.

தி.மு.க.வை மக்கள் நம்ப தயாராக இல்லை. இன்னும் 2 ஆண்டுகளுக்கு தி.மு.க.வால் ஒன்றும் செய்ய முடியாது. நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி. நிர்வாகிகள் சிறப்பாக தங்கி பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அவை தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், சுந்தரபாண்டியன், தலைமை கழக பேச்சாளர் ஜமால், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, நாகநாதன், குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக், நகர வங்கி தலைவர் வடிவேல் முருகன், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், முன்னாள் ஊராட்சி தலைவர் உரப்புளி நாகராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் திசைநாதன், திலகர், லாடசெல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story