நகைபட்டறை கழிவு சாம்பல் மண்ணை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது வழக்கு தொழிலாளர்கள், கலெக்டரிடம் புகார்


நகைபட்டறை கழிவு சாம்பல் மண்ணை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது வழக்கு தொழிலாளர்கள், கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 23 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

நகைபட்டறை கழிவு சாம்பல் மண்ணை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது திருட்டு மண் ஏற்றி செல்வதாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது என அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

சேந்தமங்கலத்தில் நகைபட்டறை கழிவு சாம்பல் மண்ணில் இருந்து தங்கம் உள்ளிட்ட உலோகங்களை பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 5 தலைமுறையாக நகைபட்டறை கழிவு சாம்பல் மண்ணில் இருந்து தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், பித்தளை போன்ற உலோகங்களை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வருகிறோம். இதற்காக தங்க நகை செய்யும் பட்டறை, நகைகள் உருக்கும் பட்டறை, நகை கடை வீதியை கூட்டும் மண் மற்றும் நகை கடை வீதியில் உள்ள சாக்கடை மண் ஆகியவற்றை இந்தியா முழுவதும் இருந்து விலை கொடுத்து வாங்கி வருகிறோம்.

அதை பயன்படுத்தி விட்டு, எங்களை போல் உள்ள மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். இந்த தொழிலுக்கு அரசு அங்கீகாரம் இல்லாததால் நாங்கள் குடிசை தொழில் போல செய்து வருகிறோம். இந்த தொழில் மூலமாக சேந்தமங்கலத்தில் சுமார் 1,700 பெண்கள் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். மறைமுகமாக 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இந்த நிலையில் இந்த மண்ணை வாங்கி வரும்போதும், நாங்கள் பயன்படுத்திவிட்டு விற்பனை செய்யும் போதும் கனிம வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். நாங்கள் விற்பனை செய்யும் மண்ணை கனிமவளத்துறையினர் திருட்டு மண் என்று லாரிகளை பிடித்து டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்கிறார் கள்.

அவர்கள் அதை முழுமையாக விசாரணை செய்யாமல், இந்த மண் கனிமவள மண் என்று வழக்குப்பதிவு செய்கிறார்கள். எனவே இனி எந்த அரசு அதிகாரிகளும், இடையூறு செய்யாமல் இந்த தொழிலை நாங்கள் தொடர்ந்து செய்ய, தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் பகுதிகளில் எவ்வித இடையூறும் இல்லை. அதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் இந்த தொழிலை தொடர்ந்து செய்வதற்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். எனவே போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தி, அவர்களில் குறிப்பிட்ட 10 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

Next Story