பச்சைநிற பட்டாடை அணிந்து காட்சி: மழைச்சாரலை பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள்


பச்சைநிற பட்டாடை அணிந்து காட்சி: மழைச்சாரலை பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 23 July 2019 4:45 AM IST (Updated: 23 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் நேற்று பச்சைநிற ஆடை அணிந்து காட்சி அளித்ததையடுத்து, பக்தர்கள் மழைச்சாரலை பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றது காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 22-வது நாளில் அதிகாலை 4 மணியளவில் அத்திவரதர், பச்சைநிற பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சீபுரத்தில் நேற்று அதிகாலை முதல் மழைச்சாரல் பெய்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆண்களும், பெண்களும் கைகுழந்தைகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் இலவச தரிசன வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் காஞ்சீபுரம் வந்தார். பின்னர், அவர் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கும், தற்காலிக பஸ் நிலையங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தார்.

பிறகு, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அத்திவரதரை தரிசித்தார். அவருக்கு துளசி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பிறகு, அத்திவரதரை தரிசிக்க இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் வரிசைகள் முறையாக செல்கிறதா? பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், குடிநீர், உணவுகள் ஆகியவை சரியாக வழங்கப்படுகிறதா? என்றும் தனது ஆய்வுகளை தொடர்ந்தார்.

இதையடுத்து, வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சருடன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story