ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை


ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராமத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 23 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது அ.மணக்குடி. இந்த ஊரைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும்,பெண்களும் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் எங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வது இல்லை. இதனால் தனியார் குடிநீர் லாரிகளையே நம்பி உள்ளோம். தனியார் லாரிகள் வராவிட்டால் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குளிக்க வைக்கிறோம். எனவே எங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டிதட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் மோட்டார் பழுதாகி ஒருவருடமாகியும் சரிசெய்யவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் இல்லை.

ராமநாதபுரத்திற்கே தண்ணீர் வழங்கிய எங்கள் பகுதியில் தற்போது தண்ணீருக்காக அவதிப்படுகிறோம்.

இதுதொடர்பாக பல முறை மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை. தண்ணீருக்காக பணம் செலவழித்ததுடன் தண்ணீர் தரக்கோரி மனு கொடுப்பதற்காக செலவழித்த தொகை அதிகமாகி உள்ளது. தண்ணீர் இல்லாததால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்்டர் வீரராகவராவ் உடனடியாக மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத இடங்களில் லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் தங்களின் கோரிக்கைளை திரளாக வந்து அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஓரிருவர் மட்டும் வந்து மனு கொடுத்தாலே நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்காவிட்டால் தொடர்ந்து செயல்படுங்கள். மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, ஒருசிலர் வந்து மனு கொடுத்தாலே நிச்சயம் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். பொதுமக்கள் தங்களின் பணத்தை வீணாக செலவழித்து கூட்டமாக வந்து மனுகொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனால், நேரமும், பணமும் விரயமாகும். மனுகொடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னை சந்தித்து தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story