பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 7:34 PM GMT)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் இருந்து முதியவர் ஒருவர் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு எனது நிலத்தை மீட்டு தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு ஓடி வந்து தனது உடலில் தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அந்த முதியவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சக போலீசார் ஒன்று சேர்ந்து தீக்குளிக்க முயன்ற முதியவரை அழைத்து சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த நகராட்சி குடிநீர் தொட்டி குழாய் கீழே அமர வைத்து தண்ணீரை திறந்து குளிப்பாட்டினர். அதனை தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர் கூறியதாக போலீசார் தெரிவித்தாவது:-

வேப்பந்தட்டை தாலுகா லப்பைக்குடிகாட்டை சேர்ந்த சதாசிவம் (வயது 62). அவர் அதே பகுதியில் உள்ள ஒருவரிடம் கடந்த 10 வருடத்திற்கு முன்பு கடனாக ரூ.80 ஆயிரம் பெற்றார். ஆனால் அந்த கடன் தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவர் சதாசிவத்தை மிரட்டி அவருடைய நிலத்தை, அவர் பெயருக்கு மாற்றி பத்திரம் முடித்து விட்டாராம். அந்த நபரிடம் நிலத்தை மீட்டு தரக்கோரி சதாசிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மங்களமேடு போலீஸ் நிலையம் ஆகியவற்றில் புகார் மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் நிலத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சதாசிவம் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சதாசிவத்தை பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பு பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை காப்பாற்றி, அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் கூறியதாக போலீசார் கூறியதாவது:-

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரை சேர்ந்த செல்வம் மனைவி தமிழரசி (47). அவருடைய கணவர் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார். மகனும் காதல் திருமணம் செய்து கொண்டு, வீட்டோடு மாப்பிள்ளை ஆகி விட்டாராம். ஏற்கனவே தமிழரசிக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா அதே கிராமத்தில் ஏரிக்கரையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் தனியாக வசித்து வந்த தமிழரசி பிழைப்பு நடத்துவதற்காக திருச்சியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி, அங்கு சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு அரசு கொடுத்த இலவச வீட்டுமனை பட்டாவை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துகொண்டாராம். இதுகுறித்து தமிழரசி அரும்பாவூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பட்டா நிலத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழரசி மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் தமிழரசியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story