ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு; கண்டமங்கலம் அருகே ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
கண்டமங்கலம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வுப் பணிக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கண்டமங்கலம்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும். நிலத்தடி நீர் குறைந்து விவசாய நிலங்கள் அழிந்து போகும் என கூறி இந்த திட்டத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சங்கராபரணி ஆற்றின் கரையோரம், புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகளை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வழுதாவூரில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் இந்த திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற துணை கலெக்டர் குமாரபாலன் கடந்த 21–ந் தேதி வழுதாவூருக்கு வந்து முகாமிட்டார். அவருடன் மேலும் சில ஊழியர்களும் வந்ததாக தெரிகிறது.
அவர்கள் இங்கு வழுதாவூர் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) கலிவரதன், சித்தலம்பட்டு வருவாய் ஆய்வாளர் மூர்த்தி ஆகியோருடன் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் பரிசோதனைக்காக மண் எடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
இதுபற்றி தெரியவந்ததால் ஆற்றின் கரையோர பகுதிகளான பக்கிரிப்பாளையம், வழுதாவூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அந்த பகுதியில் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று ஆற்றின் கரையோரம் துளையிட்டு மண் எடுப்பதற்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை அறிந்ததும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் ஆற்றின் கரைக்கு சென்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு கிராம நிர்வாக அதிகாரி கலிவரதன், வருவாய் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்ட அதிகாரியை வழுதாவூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். உடனே அங்கும் கிராம மக்களும், விவசாயிகளும் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பரிசோதனைக்காக மண் எடுக்கும் முயற்சியை அதிகாரி குமாரபாலன் தற்காலிகமாக கைவிட்டார். மேலும் மண் பரிசோதனைக்கான முறையான ஏற்பாடுகளுடன் வருவதாக கூறிவிட்டு திரும்பிச் சென்றார்.