மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில அரசு உதவ வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு


மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில அரசு உதவ வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
x
தினத்தந்தி 24 July 2019 10:15 PM GMT (Updated: 24 July 2019 8:27 PM GMT)

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள முதலியார்பட்டி என்ற முத்துநகர் கிராமத்தில் பா.ஜ.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஊர் நிர்வாகி பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், முதியோர் உதவி தொகை, பட்டா போன்ற பல்வேறு புகார் மனுக்களை கொடுத்தனர்.

இதில் குறிப்பாக பிரதமர் மோடி திட்டத்தில் எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டியுள்ளோம். ஆனால் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இதுவரை வீட்டு ரசீது, கதவு எண் தரப்படவில்லை. இதனால் மின்இணைப்பு பெற முடியவில்லை. தண்ணீர் இணைப்பு கிடைக்கவில்லை என்றனர்.

கூட்டத்தில் வைதேகி என்பவர் பேசுகையில், “எங்கள் ஊரில் அனைவரும் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு பீடிசம்பளத்தை வங்கியில் செலுத்துகின்றனர். இதனால் 5 கிலோமீட்டர் பஸ் ஏறி சென்று பணம் எடுக்க வேண்டியுள்ளது. அங்கு சென்றபின், பணம் கணக்கில் ஏறவில்லை என்கிறார்கள். இதனால் எங்களுக்கு அன்றைய தினத்துக்கான வேலையை இழக்கின்றோம். மேலும் இந்த ஊர் பனை தொழில் செய்து வரும் ஊராகும். எனவே பனை ஏறுபவர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்” என்றார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மத்திய அரசின் முத்ரா வங்கி கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சிறிய தொழிலான மீன் கடை, காய்கறி கடை நடத்த கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்வதை தடுக்கவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா வங்கி கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜாமீன் இல்லாமல் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம். மேலும் இந்த பகுதி மக்களின் குறைகளை அரசிடம் எடுத்துச் சொல்வேன். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதலியார்பட்டி மக்கள் வழங்கிய பதனீரை குடித்துவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு சென்றார். கூட்டத்தில் மாநில துணை தலைவர் காந்தி, மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story