அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தே தீர வேண்டும் - காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேட்டி


அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தே தீர வேண்டும் - காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 25 July 2019 5:23 AM IST (Updated: 25 July 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தே தீர வேண்டும் என்றும், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டணி அரசு கவிழ்ந்தது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது, கட்சியை பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை வளர்ப்பது குறித்து விவாதித்தோம். கூட்டணி குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இதுகுறித்து எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும். எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து விவாதித்தோம். அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பது பற்றியும் நாங்கள் பேசினோம். எக்காரணம் கொண்டும் அவர்களை காங்கிரசில் சேர்க்க மாட்டோம். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். பா.ஜனதாவினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story