குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? வடமாநில தொழிலாளர்களிடம் ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை


குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? வடமாநில தொழிலாளர்களிடம் ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 10:23 PM GMT)

சென்னிமலை பகுதியில், குற்றச்செயல்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து அறிய ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் விசாரணை நடத்தினார்.

சென்னிமலை,

சென்னிமலை மற்றும் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில், பல தொழிலாளர்கள் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களில் யாராவது முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதுடன் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து அடிக்கடி போலீசார் திடீர் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை பகுதியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வடமாநில வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வெவ்வேறு வழக்குகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னிமலை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களிடம் ஈரோடு ஆர்.டி.ஓ முருகேசன் விசாரணை நடத்தினார். அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பெருந்துறை தாசில்தார் துரைசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இதேபோல் சென்னிமலை அருகே கொத்தம்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அப்போது அனைத்து தொழிலாளர்களின் முழு முகவரி குறித்த ஆவணங்களையும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முறையாக அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்களில் வட மாநிலத்தவர்கள்தான் அதிகஅளவில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதன்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் முறையான ஆவணங்கள் இன்றி வடமாநிலத்தவர்கள் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் முழு முகவரி குறித்த அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாராவது வீடு வாடகைக்கு கேட்டால் பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கக்கூடாது’ என்றனர்.

Next Story