விவசாயி நிலத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது


விவசாயி நிலத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2019 4:00 AM IST (Updated: 27 July 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் நிலத்தகராறு காரணமாக விவசாயி நிலத்தில் வளர்த்து வந்த மரங்களை வெட்டி சாய்த்தனர். இது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அரியூர் கஸ்பா கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 52), விவசாயி. இவருக்கு அங்குள்ள குண்டூர்நாடு தேனூர்பட்டி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அங்கு சில்வர் ஓக் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார்.

இவருக்கும் அரியூர் கஸ்பாவை சேர்ந்த அண்ணன், தம்பிகளான அய்யாசாமி (60), பொன்னுசாமி (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக வெள்ளையன் நிலத்தில் வளர்த்து வந்த சில்வர் ஓக் மரங்களை அய்யாசாமி அவரது தம்பி பொன்னுசாமி மற்றும் அவர்களது மகன்களான சிவா (35), பிரகாசம் (30), கனகேசன் (28), மகேந்திரன் (23) ஆகிய 6 பேர் வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளையன் வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அய்யாசாமி, அவரது தம்பி பொன்னுசாமி மற்றும் அவர்களது மகன்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story