சிதம்பரத்தில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு


சிதம்பரத்தில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கடன் தொல்லையால் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ஆண்டாள் (வயது 50). இவர்களது மகன்கள் செல்வகுமார்(30), ராஜ்குமார்(28). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். எனவே ஆண்டாள் தனது 2 மகன்களுடன், குமரகுரு என்பவரது வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்.

ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக உள்ளார். எலக்ட்ரீசியனான செல்வகுமார், சிதம்பரத்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் செல்வகுமார் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆண்டாள் மற்றும் ராஜ்குமார் சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் ஆண்டாள் குடும்பத்தினர் திணறி வந்தனர்.

இதனிடையே கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் ஆண்டாள் குடும்பத்தினர் திகைத்துபோய் நின்றனர். இதன் காரணமாகவும், இளையமகன் பிரிந்து சென்று விட்டதாலும் ஆண்டாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஆண்டாள் மின் விசிறியிலும், செல்வகுமார் ஒரு கொக்கியிலும் தூக்கில் பிணமாக தொங்கினர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தாய், மகன் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரது உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story