கார்-லாரி மோதல்; 2 பெண் என்ஜினீயர்கள் பலி அத்திவரதரை தரிசிக்க சென்றபோது பரிதாபம்


கார்-லாரி மோதல்; 2 பெண் என்ஜினீயர்கள் பலி அத்திவரதரை தரிசிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 28 July 2019 4:40 AM IST (Updated: 28 July 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே கார்- லாரி மோதிய விபத்தில் 2 பெண் என்ஜினீயர்கள் பலியானார்கள்.

தாம்பரம்,

சென்னை பள்ளிக்கரணை தங்கம்நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் ராகவி (23). ஈரோடு மாவட்டம் சிதம்பரம் செட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் திவ்யதர்ஷினி, (27). மதுரை மாவட்டம் லூர்துநகர் 7- வது தெரு, கே.புரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (25). என்ஜினீயர்களான இவர்கள் 4 பேரும் சென்னையில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர்கள் 4 பேரும் காஞ்சீபுரத்திற்கு அத்திவரதரை தரிசிக்க சென்றனர். காரை தாமோதரன் ஓட்டினார். படப்பை அருகே செல்லும் போது காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக எதிர் திசையில் காரை சிறிது தூரம் ஓட்டி வந்தனர். படப்பை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி எதிரே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி காரின் பின்னால் வேகமாக மோதியது.

இதில் கார் சேதம் அடைந்தது. இதில் காரில் இருந்த ராகவி, திவ்யதர்ஷினி இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த விக்னேஷ், தாமோதரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த தாமோதரன் லேசான காயம் அடைந்தார். ராகவி, திவ்யதர்ஷினி உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story