விவசாயி கொல்லப்பட்ட 10 நாளில் மகன் மின்சாரம் தாக்கி சாவு - குடும்பமே சோகத்தில் மூழ்கியது
மதுரை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட 10 நாட்களில் அவருடைய மகன் மின்சாரம் தாக்கி இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதூர்,
மதுரை அருகே உள்ள இளமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் காஞ்சிவனம்(வயது 55), விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இருதரப்பினரும் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஞ்சிவனத்தை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை கொலை செய்தது. இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த வக்கீல் உள்பட கருப்பசாமி, சீனு, தெய்வேந்திரன், பாலமுருகன், வெள்ளைச்சாமி, ஈஸ்வரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கருப்பசாமி, மருதுபாண்டியன் ஆகியோர் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அய்யாக்கண்ணு, இளங்கோவன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட காஞ்சிவனத்தின் மகன் ரகு(32). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வந்தார். நேற்று ரகு வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மோட்டார் இயங்கவில்லை. முன்னதாக தொட்டியில் கிடந்த தண்ணீர் மின்சாரம் கசிந்து கொண்டிருந்தது. ஆனால் அதை அறியாமல் ரகு தொட்டியில் இறங்கியுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் வரவே, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தபோனார். இதுகுறித்து சிலைமான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் தந்தை இறந்துபோன சில தினங்களில் மகனும் இறந்துபோன சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story