உமா மகேசுவரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் தாய்-மகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை - கலெக்டர் ஷில்பா வழங்கினார்


உமா மகேசுவரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் தாய்-மகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை - கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 29 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 12:01 AM GMT)

முன்னாள் மேயர் உமா மகேசுவரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் தாய், மகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படுவதற்கான ஆணையை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா கேட்டு மனு கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்களிடம் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திட வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் ஷில்பா கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் கடந்த 23-ந் தேதி நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவரது கணவருடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியின் தாயாருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெறுவதற்கான உத்தரவையும், அவருடைய 3-வது மகளுக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை 3 வருடம் வழங்குவதற்கான ஆணையையும் கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

மேலும் சேரன்மாதேவி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கீதா, சேரன்மாதேவி தாசில்தார் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story