மருத்துவமனை தினத்தையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு


மருத்துவமனை தினத்தையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனை தினத்தையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை,

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியை கவுரவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நேற்று ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்பட்டது. சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ நாராயணபாபு முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது. பீலா ராஜேஷ், கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை வழங்கினார். பின்னர் சிகிச்சைகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:-
கர்ப்பிணிகளுக்கு சுகப்பிர சவம் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு யோகா வகுப்பு நடந்து வருகிறது. இதற்காக யோகா பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘பிக் மீ’ என்ற மென்பொருள் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள், தேவையான பொருட்கள் அனைத்தும் முறையாக கொடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதன்மூலம் பிறப்பு சான்றிதழையும் எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் விஜயா உள்ளிட்ட டாக்டர்கள் உடனிருந்தனர்.

இதேபோல் எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நடந்த மருத்துவமனை தின விழாவில் நீதிபதி ஜெயந்தி முன்னிலை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசையை பீலா ராஜேஷ் வழங்கினார்.

Next Story