ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று சொற்ப கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குவதும் மனித கடத்தல்தான் நீதிபதி பேச்சு


ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று சொற்ப கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குவதும் மனித கடத்தல்தான் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 7:50 PM GMT)

ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று சொற்ப கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்கு வதும் மனித கடத்தலின் ஒருவகை பரிணாமம்தான் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் பேசினார்.

கரூர்,

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக மனித கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான கிறிஸ்டோபர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மனித உரிமை மீறலின் முக்கியமான ஒன்று மனித கடத்தல் ஆகும். முன்பெல்லாம் அடிமைகளை விலைக்கு வாங்கி விற்பது என்பது உலகம் முழுவதும் இருந்தது. யார் தன்னை வாங்குகிறார்களோ அவர்களுக்கு முழுநேரமும் வேலை செய்யக்கூடிய அடிமை முறை என்பது பின்னர் வரப்பெற்ற சட்ட திட்டங்களால் ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த அணுகுமுறை தற்போது வேறு பாதையில் இருக்கத்தான் செய் கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

தண்டனைக்குரியது

கடன் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறேன், நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்று சொற்ப கூலிக்கு, அதிக நேரம் வேலை வாங்குவதும், மனித கடத்தலின் ஒரு வகை பரிணாமம் தான். பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இதில் பாதிக்கப்படுகின்றனர். பிறரின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலான மனித கடத்தல் செயல்கள் தண்டனைக்குரியதாகும்.

அது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுதர வேண்டும். அதற்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் போதிய விழிப்புணர்வை தங்களை சார்ந்தவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து தர கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலம்

இதைத்தொடர்ந்து மனித கடத்தல் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வாசிக்க கல்லூரி மாணவ, மாணவிகள் அதனை திரும்ப கூறி உறுதி மொழியேற்றனர். பின்னர் மனித கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும், மனித உரிமை மீறலை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு தாந்தோன்றிமலை மெயின்ரோடு வழியாக தாந்தோன்றிமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் அரசு கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில், சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம், குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி மோகன்ராஜ், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜய் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story