குடும்பத்தகராறில், 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தா கைது - கிணத்துக்கடவு அருகே பரபரப்பு


குடும்பத்தகராறில், 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தா கைது - கிணத்துக்கடவு அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 July 2019 11:30 PM GMT (Updated: 30 July 2019 8:06 PM GMT)

கிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறில் 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 24), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துமாலை (24). இவர்களுக்கு தர்ஷினி என்கிற 10 மாத பெண் குழந்தை இருந்தது. குமாரின் தந்தை செல்வராஜ் (44) கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால், சக்திகனி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சக்திகனியும் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை குமாரின் மனைவி முத்துமாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது அங்கு வந்த செல்வராஜ், முத்துமாலை கையில் இருந்த குழந்தை தர்ஷினியை பிடுங்கிக்கொண்டு, முத்துமாலையை கீழேதள்ளிவிட்டு, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தலைமறைவானார். இதுகுறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்கு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து குமார், தனது குழந்தையுடன் தலைமறைவான தந்தை செல்வராஜை தேடினார். ஆனால் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகள் கடத்தப்பட்டதாக கிணத்துக்கடவு போலீசில் குமார் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில், பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர்குமார், ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் செல்வராஜை தீவிரமாக தேடிவந்தனர்.

இதற்கிடையில் செல்வராஜ், தனது உறவினரிடம் செல்போனில், தன்னையும், குழந்தையையும் தேட வேண்டாம். எனது மனைவி சக்திகனியை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்று கூறியதோடு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் செல்வராஜின் செல்போன் எண்ணை டவர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது செல்வராஜ் அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், குழந்தையை செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்து, ஒத்தக்கால் மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் ரோட்டோரம் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையால் மூடி வைத்துள்ளதாக கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்வராஜை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும், செல்வராஜ், குழந்தையின் உடலை அடையாளம் காட்டினார்.

இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வேனில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

நான் கட்டிட வேலை செய்துவருகிறேன். எனது முதல் மனைவி வளர்மதி. அவளுக்கு பிறந்த குழந்தைதான் குமார். எனக்கும் வளர்மதிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால் வளர்மதி 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். எனது மகன் எனது உறவினர் முத்துலட்சுமி வீட்டில் வளர்ந்து வந்தான்.

நான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் அங்கு வேலைக்கு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த சக்திகனியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இது எனது மகனுக்கும், மருமகளுக்கும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் சக்திகனி கடந்த ஒருமாதத்துக்கு முன்பு என்னிடம் சண்டை போட்டுவிட்டு ஆறுமுகநேரிக்கு சென்று விட்டார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதற்கு காரணம் எனது மகன் குமாரும், மருமகள் முத்துமாலையும் தான் என அறிந்தேன்.

இந்த நிலையில் பேத்தி தர்ஷினியை கடத்திசென்றால் தான் எனது மனைவி சக்திகனி வருவாள் என நினைத்து குழந்தையை நேற்றுமுன்தினம் கடத்தினேன். போலீஸ் தேடுவதை கேள்விப்பட்டு, இனி குழந்தையுடன் நடமாடினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று தர்ஷினியை கொலை செய்தேன். பின்னர் ரெயிலில் வெளியூர் தப்பி செல்ல நினைத்து ரெயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்தகராறில 10 மாத குழந்தையை தாத்தாவே கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story