தொடர் கனமழை மராட்டியத்தில் பல்வேறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது


தொடர் கனமழை மராட்டியத்தில் பல்வேறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
x
தினத்தந்தி 30 July 2019 11:30 PM GMT (Updated: 30 July 2019 11:02 PM GMT)

தொடர் கனமழை காரணமாக பல்வேறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மும்பை, 

தொடர் கனமழை காரணமாக பல்வேறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பரவலாக மழை

மராட்டியத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியபோதும், மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவது மராட்டிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஜல்காவில் தபி ஆற்றில் உள்ள அத்நூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் கனமழை காரணமாக நாசிக் மாவட்டம் கங்காப்பூர் அணை நிரம்பியுள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து நிமிடத்திற்கு 8 ஆயிரத்து 833 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மரத்வாடாவுக்கு தண்ணீர்

கோதாவரி ஆற்றின் வழியாக பாயும் வெள்ளம் அவுரங்காபாத் ஜயக்வாடி அணையை சென்றடையும். இது கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் மரத்வாடா மண்டலத்துக்கு சற்று ஆறுதலாக அமையும்.

இதேபோல புனேயில் உள்ள வீர் மற்றும் கடக்வாஸ்லா அணைகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நீரா மற்றும் முதா நதிகள் வழியாக பாய்கிறது. ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம் வழியில் உள்ள பாலங்களை மூழ்கடித்தபடி செல்கிறது.

இந்த மழைநீர் புனே- சோலாப்பூர் எல்லையில் உள்ள உஜானி அணையை சென்றடையும்.

சோலாப்பூருக்கு முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் 117 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த கோடைக்காலத்தில் முழுவதுமாக வற்றிப்போனது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு சோலாப்பூர் மாவட்டத்தில் மழையும் பொய்த்து வருகிறது.

கனமழை காரணமாக தர்ணா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து தர்ணா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Next Story