தேவகோட்டை, காரைக்குடியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


தேவகோட்டை, காரைக்குடியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 6:45 PM GMT)

தேவகோட்டை, காரைக்குடியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை,

அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேவகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேவகோட்டை கவுரவத் தலைவர் கே.ஆர்.பெரியசாமி தலைமை தாங்கினார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் மகேஷ், பொருளாளர் லெனின், லெனின் பிரபு முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை கொண்டுவந்ததை கண்டித்தும் இந்த சட்டத்தில் புதிய சரத்துகளை எதிர்ப்பதாகவும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு தாங்களே கட்டண நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் அதை கண்டித்தும், சமுதாய மருத்துவ உதவி அளிப்பவர் என்ற பிரிவில் நவீன மருத்துவ பிரிவினை சேர்ந்த அனைவரும் சிகிச்சை அளிக்கலாம் என இருப்பதால் நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதனால் அப்பாவி பொது மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் ராமு செங்கதிர், மீனாட்சிசுந்தரம், ஏழுமலை நாதன், தமிழரசன், கணியன் பூங்குன்றன் உள்பட செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரைக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவசங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் கனகசபாபதி மற்றும் கவுரவ மாநில செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story