ஆடி அமாவாசையையொட்டி, சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்


ஆடி அமாவாசையையொட்டி, சுருளி அருவியில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 31 July 2019 7:46 PM GMT)

ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலாதலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் மற்றும் தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதி வழியாக சுருளி அருவியில் கொட்டுகிறது. மலைப்பகுதியில் பல்வேறு மூலிகை செடிகள் மீது பட்டு தவழ்ந்து வரும் இந்த தண்ணீரில் குளித்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் சுருளி அருவிக்கு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக தூவானம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுருளி அருவியில் நேற்று தண்ணீர் வரத்து ஏற்பட்டது. ஆடி அமாவாசையையொட்டி நேற்று, சுருளி அருவிக்கு புனித நீராடுவதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். புனித நீராடியவர்கள் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்பு சுருளி வேலப்பர், கைலாசநாதர் கோவில், விபூதி குகைகோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு வரும் வாகனங்கள் சுருளிபட்டியில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அருவி பகுதியில் ராயப்பன்பட்டி போலீஸ் சார்பில் மது ஒழிப்பு, மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அருவிக்கு வந்த பொதுமக்களுக்கு போலீசார் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.

Next Story