தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்


தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 31 July 2019 9:45 PM GMT (Updated: 31 July 2019 8:16 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 6 மணி முதல் தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு இயங்கவில்லை. இதனால் காலையில் வந்த நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவசர பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகள் செயல்பட்டன. பல ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை போராட்டம் தொடர்கிறது.

நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சில டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, புதிய சட்டத்தின் மூலம் தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி டாக்டர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்“ என்றார்.

குற்றாலம் கிளை சார்பில், தென்காசியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து இந்திய மருத்துவ கழக குற்றாலம் கிளை தலைவி டாக்டர் சீதாலட்சுமி, செயலாளர் டாக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர்கள் அப்துல் அஜீஸ், பால் சிங் உள்பட பல்வேறு டாக்டர்கள் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கரலிங்கத்திடம் அளித்தனர்.

Next Story