அந்தியூர் அருகே, நடுரோட்டில் நின்று ஒற்றை யானை அட்டகாசம் - போக்குவரத்து பாதிப்பு


அந்தியூர் அருகே, நடுரோட்டில் நின்று ஒற்றை யானை அட்டகாசம் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 1 Aug 2019 12:01 AM GMT)

அந்தியூர் அருகே நடுரோட்டில் நின்று அட்டகாசம் செய்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன. மேலும் வனக்குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் சுற்றித்திரிகின்றன.

அதேபோல் நேற்று காலை 10 மணி அளவில் பர்கூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை அந்தியூர்-மைசூர் ரோட்டில் உள்ள தாமரைக்கரை அருகே கிருஷ்ணம்பாளையம் என்ற இடத்தில் வந்து நின்றது. அதன்பின்னர் யானை ரோட்டோரமாக நின்ற மரக்கிளைகளை துதிக்கையால் ஒடித்து தின்றது.

மேலும் யானை ரோட்டில் அங்கும் இங்குமாக நடமாடியது. பின்னர் வெகுநேரம் நடுரோட்டில் வந்து நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதன் காரணமாக பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனம் போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

இதில் ஒரு சிலர் தைரியமாக வாகனங்களில் யானையை கடந்து செல்ல முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த யானை அவர்களை துரத்தியது. இதனால் பயந்து திரும்பி சென்றுவிட்டனர். இவ்வாறு வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து செல்ல முயற்சிப்பதும், யானை அவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று காரில் ஒலி எழுப்பி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் அந்தியூர்-மைசூர் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story