பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40,557 பயனாளிகள் விவரம் சேகரிப்பு கலெக்டர் தகவல்


பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40,557 பயனாளிகள் விவரம் சேகரிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2019 4:15 AM IST (Updated: 2 Aug 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40 ஆயிரத்து 557 பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி நடப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் தகுதியான குடும்பங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடு கட்டுவதற்கு மத்திய அரசின் பங்கு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதோடு தனிநபர் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு பட்டியலின் படி நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள 56 ஆயிரத்து 427 பயனாளிகளில் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 15 ஆயிரத்து 870 பேர் வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள ஆதிதிராவிடர் 5 ஆயிரத்து 747, பழங்குடியினர் 2 ஆயிரத்து 611, இதர வகுப்பினர் 31 ஆயிரத்து 264, சிறுபான்மையினர் 935 ஆக 40 ஆயிரத்து 557 பயனாளிகள் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கும் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 31-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்ந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள வீடு இல்லாத, நிலமில்லாத ஆட்சேபனை மற்றும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் தங்களது முழு விவரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் உரிய ஆவணங்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story