குன்னம் அருகே பரிதாபம்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டனர்


குன்னம் அருகே பரிதாபம்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு கொண்டனர்
x
தினத்தந்தி 2 Aug 2019 9:45 PM GMT (Updated: 2 Aug 2019 8:27 PM GMT)

குன்னம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள செங்குணம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி ரேவதி (32) கூலி வேலை செய்து வந்தார். இருவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ராமகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கி மது குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளடைவில் வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் போனது. பின்னர் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். வறுமையான சூழ்நிலையில் ராம கிருஷ்ணனின் மனைவி ரேவதி செங்குணம் பிரிவு சாலையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் ராமகிருஷ்ணன் குடித்துவிட்டு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் தொழிற்சாலையில் இருந்து ரேவதியை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர் என்று கூறப்படுகிறது. பின்னர் ரேவதி உள்ளூரிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது தாயார் தனலட்சுமியிடம் அவ்வப்போது தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், வருமானமும் இல்லை என்றும், நான் இருந்து என்ன செய்யப்போகிறேன் என்று அடிக்கடி கூறி வந்ததாகவும் தெரிகிறது. அதேபோல் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரேவதியும் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ராமகிருஷ்ணன், ரேவதி இருவரும் நேற்று இரவு தங்களுடைய ஓட்டு வீட்டின் விட்டத்தில் ஒரே கயிற்றின் வெவ்வேறு முனைகளில் கழுத்தில் கயிற்றை மாட்டி கட்டிப்பிடித்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி வரை வீடு திறக்காததால் அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால் பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு விட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணன், ரேவதி சாவில் வேறு ஏதாவது காரணம் இருக்கலாமா? என்ற கோணத்திலும், ராமகிருஷ்ணனுக்கு கடன் தொல்லை ஏதும் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story