அழகிக்குளம் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தயாரானது - பொதுமக்களே தூர்வாரி தண்ணீரை நிரப்பினர்


அழகிக்குளம் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தயாரானது - பொதுமக்களே தூர்வாரி தண்ணீரை நிரப்பினர்
x
தினத்தந்தி 2 Aug 2019 11:48 PM GMT (Updated: 2 Aug 2019 11:48 PM GMT)

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்ட அழகிக்குளம், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்காக தயாராகி உள்ளது. இந்த குளத்தை தூர்வாரிய பொதுமக்கள் தற்போது தண்ணீரையும் நிரப்பி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை ஆண்ட மன்னர்களில் ராஜராஜசோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நகரின் நீர் தேவைக்காக, சிவகங்கை குளம், அய்யன் குளம், அழகிக்குளம் என 50-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டினார். இதில் அழகிக்குளம் என்பது தனி சிறப்பு பெற்று விளங்கியுள்ளது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார்.

ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். மேலும் கோவில் விமானத்தில் வைத்துள்ள பெரியகல்லில் இடைச்சிக்கல் அழகி மூதாட்டி வீட்டிலிருந்து எடுத்து வந்ததாலும், அவருக்கு ராஜராஜசோழன் அழகி மூதாட்டியின் சிவ தொண்டை பார்த்து, அந்த மூதாட்டிக்கு தீர்வையின்றி அழகி குளத்தை பதிவு செய்து கொடுத்தான் என்று வரலாற்று பதிவுகள் கூறப்படுகிறது.

தஞ்சை பெசன்ட் அரங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு கல்லணை கால்வாயில் இருந்தும், ராணி வாய்க்கால் மூலம் தண்ணீர் வர நீர்வழிப்பாதைகள் இருந்துள்ளன. பின்னர், ஆக்கிரமிப்புகளால், கருவேல மரங்கள் மண்டியும், குப்பை மேடாகவும் மாறிவிட்டன. தற்போது இதை அகற்றி தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாம்பாட்டித்தெரு, கவாஸ் காரத்தெரு உள்ளிட்ட தெருவாசிகள் இணைந்து முதற்கட்டமாக, குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றினர். பின்னர் பொதுமக்களிடம் நிதி வசூலித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் ரோட்டரி சங்கமும் கைகோர்த்தது. இதையடுத்து பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தூர் வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. தற்போது குளத்தை சுற்றி கரையில் பொதுமக்கள் வலம் வரும் வகையில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா அன்று நீர்நிலைகளில் பூஜை செய்து கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து பெண்கள் வழிபடுவார்கள். ஆனால் ஆறுகளில் தண்ணீர் வராததால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களையிழந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அழகிக்குளத்தை தூர்வாரிய பொதுமக்கள், ஆடிப்பெருக்கு விழாவை அழகிக்குளத்திலேயே கொண்டாடும் வகையில் நீர் நிரப்பி உள்ளனர். நேற்று 5 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினர். இன்று அதிகாலையில் மேலும் 5 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினர்.


Next Story