ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1½ லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1½ லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 6:23 PM GMT)

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்வளத்தை பெருக்க 1½ லட்சம் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி, 

தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்து மாவட்டத்தின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் மீன்வளத்தை மேம்படுத்தும்வகையில் 1½ லட்சம் மீன்குஞ்சுகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவில் உதவி கலெக்டர் சிவன்அருள், வேளாண் இணை இயக்குனர் கைலாசபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை இங்கே அதிக அளவில் விட்டு செல்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் ஒகேனக்கல்லில் 17 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு மழைநீர் நிலத்தடியில் முறையாக சேகரிக்கப்படுவதும் பாதிக்கப்படுகிறது. சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பொருட்களில் பார்சலாக கொண்டு சென்று சாப்பிடும்போது அதில் உள்ள நச்சு உணவில் கலந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அதை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.

வறட்சி அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அத்தியாவசியமானது. 1000 சதுர அடி கொண்ட வீட்டின் மேற்கூரை மீது ஒரு ஆண்டில் 80 ஆயிரம் லிட்டர் மழைநீர் கிடைக்கும். இந்த மழைநீரை நிலத்தடியில் கொண்டு போய் சேகரிக்க வேண்டும். அதன்மூலம் அந்த பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் உயர்ந்து வறட்சி இல்லாத நிலை உருவாகும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

விழாவில் மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, தோட்டக்கலைதுணை இயக்குனர் சீனிவாசன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணி, சுற்றுலா அலுவலர் சிவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், போக்குவரத்து துணை மேலாளர் சிவமணி, தாசில்தார் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலைபண்பாட்டுதுறை சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கும் ஆடிப்பெருக்கு நிறைவு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story