ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் நாகையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா


ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் நாகையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
x
தினத்தந்தி 3 Aug 2019 10:30 PM GMT (Updated: 3 Aug 2019 7:02 PM GMT)

ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் நாகையில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்குவிழா. இந்த ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. நாகை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால், நாகை பகுதிகளில் உள்ள ஆறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் அடிப்பம்புகளில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அப்போது மஞ்சள், குங்குமம், பூக்கள், கருகமணி, பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து படைத்தனர். தொடர்ந்து பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயம்

கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவின் போது நாகையில் உள்ள கிளை வாய்க்கால்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால், வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. ஆண்டு தோறும் ஆனந்தமாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்குவிழா இந்த ஆண்டு களையிழந்துள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். தற்போது குடிநீரே கானல் நீராக உள்ள நிலையில், விதை விதைக்க தண்ணீர் இல்லை. விவசாயமும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றனர்.இதே போல சிக்கல், கீழ்வேளூர், தேவூர் பகுதிகளிலும் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தெருவில் உள்ள அடிபம்புகள் மற்றும் கிணற்றுகரைகளில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

திருமருகல்

திருமருகல் ஒன்றியத்தில் முடிகொண்டான் ஆறு, திருமலைராஜன் ஆறு, அரசலாறு, வடக்கு பத்தாறு, நரிமணியாறு, ஆழியான் ஆறு, வளப்பாறு, தெற்கு புத்தாறு, பிராவடையான் ஆறு ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் காவிரித்தாயை வரவேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்தாண்டு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் திருமருகல் ஒன்றிய பகுதி ஆறுகள், குளம் குட்டைகளில் தண்ணீரின்றி வறண்டு உள்ளது. இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் திருமருகல், சீயாத்தமங்கை, குருவாடி, அண்ணாமண்டபம், கூத்தர்பட்டர்தோப்பு , போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் குழாயடியிலும், தெருக்களிலுள்ள கைப்பம்பு குழாயடிகளிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். இதில் திருமணமான புதுத்தம்பதியர்கள். கன்னிப்பெண்கள், உள்ளிட்ட அனைத்து பெண்களும் ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி கொண்டனர்.

Next Story