காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தஞ்சை, திருவையாறில் களை இழந்த ஆடிப்பெருக்கு விழா


காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தஞ்சை, திருவையாறில் களை இழந்த ஆடிப்பெருக்கு விழா
x
தினத்தந்தி 3 Aug 2019 10:45 PM GMT (Updated: 3 Aug 2019 8:36 PM GMT)

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தஞ்சை, திருவையாறில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது. காவிரி தாய்க்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது ஆடிப்பெருக்குவிழா களை கட்டும்.

ஆனால் இந்த ஆண்டு கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிடாததாலும், பருவமழை பொய்த்துவிட்டதாலும் தண்ணீர் இன்றி காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் ஆடிப்பெருக்கு விழா நேற்று களை இழந்து காணப்பட்டது. தஞ்சையை அடுத்த திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

வழிபாடு

திருவையாறில் பெண்கள் படித்துறை மற்றும் காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து காவிரி தாய்க்கு வாழை இலையில் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர் ஆகியவற்றை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் வாழை இலையில் கற்பூரம் ஏற்றி, அதை அப்படியே ஆற்றில் மிதக்கவிடுவது வழக்கம். ஆனால் தண்ணீர் இல்லாததால் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் வாழை இலையில் கற்பூரம் ஏற்றி விட்டனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குளிப்பதற்கு தற்காலிக ஏற்பாடாக குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

மஞ்சள் கயிறு

அந்த தண்ணீரில் புதுமண தம்பதிகள் பலர், திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளை கொண்டு வந்து போட்டனர். தொடர்ந்து அவர்கள், தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி சூரியனை பார்த்து வழிபட்டனர். வழிபாடு முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று கொண்டனர்.

தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டனர். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும் காவிரி தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர்.

வேப்பமரம்-அரசமரம்

பின்னர் படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழவகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

முன்னதாக அம்மனுடன் ஐயாறப்பர் பல்லக்கில் எழுந்தருளி படித்துறைக்கு வந்தார். அங்கு அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காலை நேரத்தில் புஷ்ய மண்டப படித்துறையில் மின்மோட்டார் இயங்கவில்லை. இதனால் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் புதுமண தம்பதிகள், மாலைகள், வாழை இலையுடன் பூஜை பொருட்களை ஆற்று மணலில் போட்டுவிட்டு சென்றனர். உடனடியாக மின்மோட்டார் சரி செய்யப்பட்டு, ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, கரந்தை வடவாறு படித்துறை ஆகியவற்றிலும் ஆடிப்பெருக்கு விழா களை இழந்து கூட்டம் மிக, மிக குறைவாகவே இருந்தது.

Next Story