மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் நண்பர்கள் தின கொண்டாட்டம் செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர் + "||" + In Preambalur Friends Day Celebration In cell phone Shelfy Taken and enjoyed

பெரம்பலூரில் நண்பர்கள் தின கொண்டாட்டம் செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்

பெரம்பலூரில் நண்பர்கள் தின கொண்டாட்டம் செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்
பெரம்பலூரில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவிகள் தோழிகளுடன் செல்போனில் ‘செல்பி‘ எடுத்தும் மகிழ்ந்தனர்.
பெரம்பலூர்,

நல்ல புத்தகம் ஒரு நண்பனுக்கு சமம். ஆனால் நல்ல நண்பனோ ஒரு நூலகத்திற்கு சமம் என்று நட்பின் மேன்மையை பறைசாற்றியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். நட்புக்கு ஆண், பெண் வேறுபாடு, சாதி, மத பேதம், சமூக அந்தஸ்து என எதுவும் கிடையாது. அனைத்து மதங்களும் போதிப்பது நட்பையும், அன்பையும் தான். விலைமதிப்பு உள்ள முத்தும் தேடித்தான் எடுக்க வேண்டும். ஆனால் தேடாமல் கிடைப்பது நட்பு. இந்தியாவில் நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்களது நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப்களில் குறுஞ்செய்திகளை ஒருவருக்கொருவர் மாறி, மாறி.. அனுப்பி நண்பர்கள் தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் டிக்-டாக்கில் வீடியோ பதிவிட்டிருந்தனர். பெரம்பலூரில் பலர் தங்களது நண்பர்களை நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் கைக்கொடுத்து, அரவணைத்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டதை காண முடிந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் இல்லாததால் நண்பர்கள் சேர்ந்து தற்போது வெளியான புதிய திரைப்படங்களை பார்க்க சினிமா தியேட்டர்களுக்கு சென்றனர். இதனால் தியேட்டர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும் பலர் தங்களது பேஸ்புக், வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் களில் நண்பர்கள் தினத்தை குறிக்கும் வகையில் திரைப்படங்களின் வீடியோ பாடல்கள், பாடல் வரிகள், நண்பர்களுடன் எடுத்து கொண்ட பழைய புகைப்படங்களை வைத்திருந்தனர். அவற்றையும் செல்போன் மூலம் சக நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டனர். நண்பர்கள் ஒன்று சேர்ந்து மதியம் ஓட்டலுக்கு உணவருந்த சென்றதை காண முடிந்தது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் நேற்று மாலை நண்பர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர், தோழிகளுடன் சேர்ந்து நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள ஊஞ்சலில் நண்பர்கள் உற்சாகத்துடன் ஊஞ்சலாடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.