முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மோதல் போக்கை கைவிட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மோதல் போக்கை கைவிட வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 9:30 PM GMT)

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மோதல்போக்கை கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். ஒரு மாநிலம் முன்னேற்றம் அடைய முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகமிக அவசியம். இதுபோன்ற நிலையில் மாநில முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

ஏற்கனவே கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியின் வளர்ச்சி இன்னும் பாதிக்கப்படும். மக்கள் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்த மோதலால் ஏற்கனவே 2 பிரிவாக உள்ள அதிகாரிகள் தற்போது 3 பிரிவாக உருவாகுவார்கள்.

இந்த பிரிவு புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை அதிகரிக்க செய்யும். புதுச்சேரியின் நற்பெயருக்கு தீங்கு ஏற்படும். எனவே அமைச்சரவையில் உள்ள மோதல் விரைவில் முடிவிற்கு வரவேண்டும்.

மக்கள் நலன் மற்றும் புதுச்சேரியின் நலன்கருதி மோதல் போக்கினை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கைவிட வேண்டும். மோதல் போக்கை கைவிட முடியாதவர்கள் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Next Story