குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்; விவசாயிகள் மகிழ்ச்சி
குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணல்மேடு,
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 2014–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த திட்டத்திற்கான ஆய்வுகள் மட்டுமே நடைபெற்றது. ஆனால், பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் கிடப்பில் கிடந்தது. இதுகுறித்து விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நாகை மற்றும் கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அறிவித்தப்படி தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியையொட்டி வாகனங்கள் சென்று வரும் வகையில் இருவழிபாதையுடன் 12 மீட்டர் அகலத்துடன் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. 1 கி.மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பாலத்தின் இருபுறமும் நடைபாதை மேடையும் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த தடுப்பணை 84 கதவணைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணையில் இருந்து மேற்கு பக்கம் செல்லக்கூடிய 2 மாவட்டங்களின் கொள்ளிடம் ஆற்றின் கரைகளும் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கட்டும் மதிப்பு ரூ.396 கோடியே 46 லட்சம் என்று தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பணை கட்டப்பட்டால் திருச்சிற்றம்பலம், குமாரமங்கலம், கடலங்குடி, சீப்புலியூர், முடிகண்டநல்லூர், பூதங்குடி, ஆத்தூர், கேசிங்கன், பாக்கம், காவலமேடு, இந்திராநகர், விருதாங்கநல்லூர், மணல்மேடு, இழுப்பப்பட்டு, நடுதிட்டு, பாப்பாக்குடி, வக்காரமாரி, ராஜசூரியன்பேட்டை, திருவாளப்புத்தூர், வில்லியநல்லூர் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் பயனடையும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். குடிநீர் ஆதாரமும் பெருகும். குறிப்பாக வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் சேமிக்கப்படும். மேலும் இப்பகுதியில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மயிலாடுதுறை, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் குடிநீர் ஆதாரமும் பெருகும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.