திருவண்ணாமலையில் , மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு


திருவண்ணாமலையில் , மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:15 PM GMT (Updated: 5 Aug 2019 7:27 PM GMT)

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்டவை கேட்டு 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார

அப்போது ஏதேனும் அரசு பணி வழங்குமாறு திருவண்ணாமலை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அங்கிருந்த அரசு ஊழியர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். இதையடுத்து அவர் கலெக்டரிடம் தனது கோரிக்கையை மனுவை அளித்தார். இதனால் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விளை நிலமாக உள்ள பட்டா நிலத்தை புறம்போக்கு நிலமாக தவறுதலாக குறிப்பிட்டதை மீட்டு தரக்கோரி மனு அளிக்க வந்த திருவண்ணாமலை அய்யம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த அய்யாவு என்ற முதியவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தினாலும் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Next Story