குடிபோதையில் சோப்பு நிறுவன உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது
குடிபோதையில் சோப்பு நிறுவன உரிமையாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்,
செங்கம் அருகே பனை ஓலைபாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவர் அதே பகுதியில் சோப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்கம் தாலுகா அன்னந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ், ரஞ்சித், வாசுதேவன் மற்றும் முரளி உள்ளிட்டோர் பனைஓலைப்பாடி டாஸ்மாக் கடையில் மது வாங்கி ராஜேசின் சோப்பு நிறுவனம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜேசுக்கும், குடிபோதையில் இருந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி ராஜேசை குடிபோதையில் இருந்தவர்கள் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பனைஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராஜேசை தாக்கிய அன்னந்தல் கிராமத்தை சேர்ந்த 4 பேரையும் பிடித்து பனையோலைபாடியில் உள்ள கோவிலில் வைத்து பூட்டினர். மேலும் பனைஓலைப்பாடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் நிகழ்வதாகவும், இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பலமுறை கூறியும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் பனைஓலைப்பாடி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்றும் சிறைபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்த செங்கம் தாசில்தார் பார்த்தசாரதி, செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ்பாபு, புதுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்- இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், ராஜேசை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜேசை தாக்கிய சின்னராஜ், ரஞ்சித், வாசுதேவன், முரளி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story