ஓட்டப்பிடாரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் மின்உற்பத்தி நிலைய ஊழியர் சாவு


ஓட்டப்பிடாரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் மின்உற்பத்தி நிலைய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:00 PM GMT (Updated: 5 Aug 2019 9:53 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் மின்உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்கனி. இவரின் மகன் சவரிமுத்து (வயது 29). இவர் தருவைகுளம் அருகே உள்ள தனியார் மின்உற்பத்தி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வாலசமுத்திரம் விலக்கில் முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்ற போது நிலைதடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளுடன் லாரிக்கு அடியில் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ராமநாதபுரம் எம்.வேலாயுதபுரத்தை சேர்ந்த சங்கரன் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story